டெங்கு காய்ச்சல் 360•
மழைக்காலம் துவங்கிவிட்டது. கனமழை, காற்றழுத்த தாழ்வு பகுதி, வெள்ள நீர் வீடுகளில் புகுவது என தொடர் செய்திகள் நம்மை அச்சுறுத்துகின்றன. கூடவே மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சலும் தான். கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவது சற்று அதிகரித்து வருகிறது. டெங்குவின் அறிகுறிகளை முதலிலேயே கண்டு சரிசெய்வதும் வராமல் நம்மை தற்காத்து கொள்வதும் அவசியம்.
டெங்கு காய்ச்சல் பரவுவது எப்படி?
ஏடிஸ் எகிப்தி (Aedes aegypti) என்ற ஒருவகை கொசுவால் ஏற்படக்கூடியது டெங்கு காய்ச்சல். மற்ற வகை கொசுக்களிலிருந்து ஏடிஸ் எகிப்தி வகை கொசுக்களை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம். இவற்றின் உடல் மற்றும் கால்களில் வெள்ளை நிற வரிகள் காணப்படும். அதனால் இவற்றை `புலி கொசு' என்றும் கூறுவார்கள். இது பகலில் மட்டும் கடிக்கும் தன்மை கொண்ட கொசுவாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் ஒருவரை ஏடிஸ் எகிப்தி கொசு கடிக்கும்போது, எளிதில் டெங்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்பாகிறது. இது கொரோனாவை போல் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் தொற்றுநோய் இல்லை. ஏடிஸ் எகிப்தி வகை கொசு ஒருவரைக் கடிப்பதால் மட்டுமே டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்:
1.கடுமையான காய்ச்சல் (101 டிகிரிக்கும் மேல்)
2.தலைவலி
3.உடல் அசதி
4.உடல் வலி
4.வாந்தி
6.வயிற்றுப்போக்கு
7.வயிற்று வலி
8.உடல் முழுவதும் சிவப்பு நிற படை தோன்றும்.
Febrile phase
டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட ஒருவருக்கு முதல் மூன்று நாள்களுக்குக் கடுமையான காய்ச்சல் இருக்கும். உடலின் வெப்பநிலை 101 டிகிரிக்கு மேல் இருக்கும். பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொண்டாலும் இந்தக் காய்ச்சல் குறையாது. டெங்குவில் இந்த முதல் மூன்று நாள்களை ஃபெப்ரைல் பேஸ் (febrile phase) என்பார்கள்.
Critical phase:
இதற்கடுத்த மூன்று நாள்களை கிரிட்டிகல் பேஸ் (critical phase) என்பார்கள். இந்த கிரிட்டிகல் பேஸ் நிலையில் உடலின் காய்ச்சல் முழுவதும் குறைந்து கைகால், பாதம் எல்லாம் ஜில்லென்று இருக்கும். இந்த நிலையில்தான் உடலின் ரத்தத்தில் உள்ள ரத்த தட்டுகள் (Platelets) குறையத் தொடங்கும். பல் ஈறுகளில் ரத்தம் கசிவு ஏற்படும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயிற்றின் உள்ளே ரத்தக் கசிவு ஏற்படும். இந்த ரத்தக் கசிவு இரைப்பைக்கு மேலே ஏற்பட்டால் அது ரத்த வாந்தியாக வெளிப்படும். இரைப்பைக்குக் கீழே, குடல் பகுதிகளில் இந்த ரத்தக் கசிவு ஏற்பட்டால் உடலிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கறுப்பு நிறத்தில் இருக்கும். வயிற்றுக்குள் ஏற்படும் இதுபோன்ற ரத்தக் கசிவால் கடுமையான வயிற்றுவலி ஏற்படும். இதுவும் டெங்குவின் முக்கிய அறிகுறிகளுள் ஒன்று. இவை 4 முதல் 6 வது நாட்களில் நடைபெறும். இந்த நாட்களில் மிக கவனமாக மருத்துவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். தினம் இரத்த தட்டைஅணுக்கள் அளவை பரிசேதிக்க வேண்டும்.
Recovery phase
படி படியாக உடல் அசதி சேர்வு குறையத் தொடங்கும். ரத்த கசிவும் குறைய தொடங்கி இரத்த தட்டையணுக்கள் அதிகரிக்க துவங்கும்.
டெங்குவிற்கான சிகிச்சை முறை
டெங்குவிற்கான முதன்மை சிகிச்சை நீரிழப்பை சரிசெய்வதாகும். ஓ.ஆர்.எஸ் எனும் திரவத்தை காய்ச்சல் பாதித்த நோயாளிகள் அதிகமாக பருக வேண்டும்.
அல்லது உப்பு சர்க்கரை கரைசலை பருக வேண்டும்.
வாயால் பருக இயலாதவர்களுக்கு, சிறை (ரத்த நாளங்கள்) வழியாக மருத்துவமனையில் திரவங்களை ஏற்ற வேண்டும்.
காய்ச்சலை குறைக்க பாராசிடமால் மாத்திரை போதுமானது.
குளிர்ந்த நீரை கொண்டு உடல் முழுவதும் ஒத்தடம் கொடுப்பது மிகுந்த நன்மை பயக்கும்.
டெங்கு ஒரு வைரஸ் நோயாதலால் இதற்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் அவசியம் இல்லை.
மேலும் ரத்த தட்டணுக்களை பாதித்து ரத்த போக்கை உருவாக்கும் வியாதியாதலால் தேவையற்ற ஊசிகளை தவிர்த்து விட வேண்டும்.
காய்ச்சல் ஏற்படின் மருத்துவரை அணுகவேண்டும். அதைவிடுத்து மருந்தகங்களில் சுயமாக மருந்து மாத்திரைகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற சொன்னால் அதை உதாசீனப்படுத்தாமல் தங்கி உள்நோயாளியாக சிகிச்சை பெற வேண்டும்.
டெங்கு பரவுவதை தடுப்பது எப்படி?
டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுவானது நல்ல நீரில் முட்டையிட்டு பொறிக்கக்கூடியது. ஆகவே நம் வீட்டை சுற்றி நல்ல தண்ணீர் சேமித்து வைக்கும் சட்டி சாமான்களை மூடியிட்டு வைக்க வேண்டும்.
வீட்டை சுற்றி பழைய டயர் , காலி பாட்டில்கள், பேப்பர் கப்கள், சிரட்டைகள் , இளநீர் கூடுகள் எதையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். டெங்கு கொசு முட்டையிட பத்து மில்லி நன்னீர் போதும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தங்கள் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியின் பின்புறம் சேரும் தண்ணீரிலும் அந்த கொசு முட்டையிட்டு வளரும். அதை கவனியுங்கள். தண்ணீர் சேமித்து வைக்கும் கலன்களை ப்ளீச்சிங் பவுடர் கொண்டு வாரம் ஒருமுறையேனும் தேய்த்து கழுவ வேண்டும்.
தண்ணீரை கட்டாயம் காய்ச்சி பருக வேண்டும். மலம் கழித்த பின்னும், உணவு உண்ணும் முன்னும் கட்டாயம் கைகளை சோப்பு கொண்டு கழுவ வேண்டும்.
கழிவறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் அடிக்கடி பிளீச்சிங் பவுடர் அல்லது டெட்டால் ஊற்றி சுத்தம் செய்ய வேண்டும்.
வீட்டு ஜன்னல்களில் கொசு வலை அடிப்பது சிறந்தது. அல்லது கொசு வலைக்குள் உறங்குவது நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்ண வேண்டும். தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும். உணவுகளை சூடாக சாப்பிட வேண்டும்.
டெங்கு காய்ச்சலை பற்றி அச்சம் தேவையில்லை. டெங்கு வந்தபின் சிகிச்சை எடுப்பதை விட டெங்கு வருமுன் காப்பது சிறந்தது.
Comments
Post a Comment