பக்கவாதம் வருவது ஏன்? வராமல் தடுப்பது எப்படி?

"நல்லா இருந்தவங்க திடீரென ஒரு நாள் பக்கவாதத்துல படுத்துட்டாங்க" இதுபோன்ற வார்த்தைகளை நம்மில் பலர் கேட்டதும் நம் நெருங்கியவர்கள் பலர் இந்நோயால் அவதி படுவதும் உண்டு. பக்கவாதம் பலர் வாழ்க்கையை முடக்கி போட்டுவிடுகிறது.
      உலகில் ஆறுவினாடிகளில் ஒருவர் பக்கவாத நோயால் பாதிக்கப்படுவதோடு அதில் 30 சதவீதத்தினர் இந்த நோய் தாக்கத்தால் இறந்துவிடுகிறார்கள், மாரடைப்பை அடுத்து பக்கவாத நோயால் உண்டாகும் இறப்பு அதிகம் என்றும் இவை மேலும் அதிகரிக்ககூடும் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.
40 வயதிற்கு மேற்பட்டவர்களை பக்கவாதம் அதிக அளவில் தாக்கி ஓர் இடத்தில் முடக்கிவிடுகிறது. வெகு சிலரே இதிலிருந்து முழுமையாக மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திருப்புகின்றனர்.

பக்கவாதம் என்றால் என்ன?
நமது அனைத்து செயல்பாடுகளும் மூளையால் கண்காணிக்கப்பட்டு நிகழ்த்தபடுபவையாகும். நமது மூளையை வலது, இடது என 2 பகுதிகளாகப் பிரிக்கலாம். உடலின் வலது பக்கச் செயல்பாட்டை இடது பக்க மூளையும், உடலின் இடதுபக்க செயல்பாட்டை வலது பக்க மூளையும் கண்காணிக்கிறது.
மூளையின் ஒரு பக்கத்தில் ரத்த ஓட்டம் குறைந்து, அந்தப் பகுதி செயல்படாமல் போகும்போது, உடலின் எதிர்பாகத்தில் ஒரு கை, ஒரு கால் மற்றும் முகத்தில் ஒரு பகுதி செயலற்றுப் போவதைப் ‘பக்கவாதம்’ (Stroke) என்கிறோம். மூளையின் வலது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் இடது பக்கம் செயல்படாது. மூளையின் இடது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் வலது பக்கம் செயல்படாது. பொதுவாக, வலது பக்கம் பக்கவாதம் வருமானால் பேச்சு பாதிக்கும். காரணம், பேச்சுக்குத் தேவையான சமிக்ஞைகள் மூளையின் இடது பக்கத்திலிருந்து வருகின்றது.
 
பக்கவாதம் என்பது இரண்டு வகைப்படும். ஒன்று Ischemic  stroke என்பது. இதில் மூளைக்குப் செல்லும் இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும். அவ்வாறு அடைப்பு ஏற்பட்ட பின் அந்த மூளையின் நரம்பு செல்கள் எல்லாம் செயலிழந்து போய்க்கொண்டிருக்கும்.

மற்றொன்று முற்றிலும் எதிரானது அதனை இரத்த வெடிப்பு என்போம். இரத்தக்கொதிப்பினால் மூளைக்குப் போகின்ற இரத்தக்குழாய் வெடிப்பதால் மூளையில் இரத்தக்கசிவு ஏற்படுவது Hemorrahagic Stroke.

பக்கவாதம் வருவதிற்கான காரணங்கள் என்ன?
1.குடும்பத்தில் பெற்றோருக்கு அல்லது அவர்களின் சந்ததியினருக்கு பக்கவாதம் வந்திருந்தால், அவர்கள் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். 
2.உயர் ரத்த அழுத்தம்
3. நீரிழிவு நோய்
4.அதிக ரத்தக் கொழுப்பு
5.மாரடைப்பு, இதயவால்வு கோளாறுகள், இதயச் செயலிழப்பு, இதயத்துடிப்புக் கோளாறுகள் போன்றவை பக்கவாதம் வருவதற்கு அடித்தளம்.
6. புகைப்பிடித்தல், அடுத்தவர் விடும் புகையைச் சுவாசித்தல்
7. மது அருந்துதல்
8.உடல் பருமன், உடல் உழைப்பு குறைந்த வாழ்க்கைமுறை ஆகியவை பக்கவாதம் வருவதைத் தூண்டுகின்றன. 
9.தலைக்காயம்
10.மூளையில் ஏற்படும் தொற்று போன்றவற்றாலும் பக்கவாதம் வரலாம். 11.முன் அறிவிப்புகள் இல்லாமல் பக்கவாதம் பெரும்பாலும் திடீரென்று வருவதற்கு மன அழுத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது.

பக்கவாதத்தின் அலார அறிகுறிகள்...

1. முகத்தில் அல்லது உடலில் ஒரு பக்கத்தில் மரத்துப்போதல், பலவீனம் அடைதல், தளர்ச்சி அடைதல் அல்லது ஒரு பக்கமாக இழுப்பது போன்ற உணர்வு, உடல் செயலிழத்தல்.

2. பேசும்போது திடீரென வார்த்தைகள் குழறுதல்... மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதில் பிரச்சனை.எளிய வாக்கியங்களைக்கூட வெளிப்படுத்த முடியாத நிலைமை.

3. நடக்கும்போது தள்ளாடுதல். நேராக நிற்க முடியாத நிலைமை, ஒரு காலில் மட்டும் உணர்ச்சி குறைந்திருப்பது.

4. பேசிக்கொண்டிருக்கும்போது சட்டென்று சில நொடிகள் பேச்சு நின்றுபோகும். பார்வை திடீரென்று குறைந்து உடனே தெளிவாகும். இரட்டைப் பார்வை ஏற்படும்.

நடந்து செல்லும்போது தலைசுற்றும். உணவை வாய்க்குக் கொண்டுசெல்லும்போது கை தடுமாறும். கையெழுத்துப் போடும்போது கை விரல்கள் திடீரென ஒத்துழைக்காது. வழக்கத்துக்கு மாறான தலைவலி, வாந்தி.

பக்கவாத நோயின் அறிகுறிகள் வெளியில் தெரிந்த 2 அல்லது 3 மணி நேரத்துக்குள் தக்க சிகிச்சை அளிக்காவிட்டால் உடலின் ஒரு பகுதி முழுவதுமாக செயலிழந்துவிடும். ஆகவே, காலம் தாழ்த்தாமல் சிகிச்சை பெறுகிறவர்களுக்கு பாதிப்பு குறையும்.

பக்கவாதம் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

1.ரத்த அழுத்தம் சரியாக இருக்க வேண்டும். முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் மாதம் ஒருமுறை தங்கள் ரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்ள வேண்டும். இந்த அளவு அதிகமாக இருந்தால், அதைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளைத் தொடர்ந்து முறைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க வேண்டுமென்றால், உணவுமுறையும் முக்கியம். ரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி சமையல் உப்பு (சோடியம் குளோரைடு). நாளொன்றுக்கு 3லிருந்து 5 கிராம் வரை உப்பு போதுமானது. இதற்கு மேல் உப்பு உடலுக்குள் போனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இதைத் தவிர்க்க ஊறுகாய், கருவாடு, அப்பளம். வடகம், சிப்ஸ், பாப்கார்ன்,  போன்றவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.

2. இரத்த சக்கரை அளவை கட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும்.

3. புகைப்பிடிப்பது, மது அருந்துவதை முழுமையாக நிறுத்த வேண்டும்.

4. உடல் எடையை சமநிலையின் வைத்திருக்க வேண்டும்.

5. தினமும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வது அவசியம். 

6. எண்ணெயில் பொரித்த, வறுத்த, ஊறிய உணவுகள் தவிர்ப்பது நல்லது. 

7. நார்ச்சத்துள்ள உணவுகளை விரும்பிச் சாப்பிடுங்கள். கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள்... கொய்யா, தர்ப்பூசணி, மாதுளை போன்ற பழங்கள்... பீன்ஸ், பட்டாணி போன்ற பயறுகள்... புதினா, கொத்தமல்லி போன்ற பச்சை இலைகள்... காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம்.

8. மன அழுத்ததை குறைக்க தியானம் செய்வது நலம். எப்போதும் மனதை ஓர் நிலையில் வைத்து இருக்க பழகுவது பல நோய்களில் இருந்து நம்மை காக்கும்.

Comments

Popular posts from this blog

குறட்டை ஆபத்தானதா??

டெங்கு காய்ச்சல் 360•