வலிமிக்க மாதவிடாயால் அவதிபடுவது ஏன்?

மாதாமாதம் வரும் மாதவிடாய் நம்மில்  பலருக்கு வலியுடன் கூடியதாகவே உள்ளது. சிலருக்கு வலி தாங்க கூடியதாகும், சிலருக்கு வலி தாங்க முடியாமல் அவதிபடுவதாகவும் இருக்கும். 'ஏன்தான் இந்த வலி எல்லாம் வருதோ. ஏன்தான் பெண்ணாக பிறந்தமோ ' ௭ன பல பெண்கள் மாதவிடாய் வலியால் புலம்புவதை நாம் கோட்டு இருப்போம். மாதவிடாய் வலியால் அவதிபடும் பெண்கள் பலர் படுக்கையில் உருண்டு, பிரண்டு தனக்கென வலிகுறைய சௌவுகரியமான சூழலை தேடுவார்கள். அந்த 3 நாட்களும் மிகுந்த வலி வேதனையுடனேயே ௭ப்போது மாதவிடாய் முடியும் என காத்திருப்பார்கள்.

மாதவிடாயின்போது வலி வருவது ஏன்? 

மாதவிடாய்க்கு ஓரிரு நாட்களுக்கு முன்னும், மாதவிடாய் இருக்கும்போதும் ஏற்படும் வலி மாதவிடாய் வலி. மாதவிடாய் சமயத்தில் விரிவடைந்திருக்கும் கர்ப்பப்பை, குருதி வெளியேறி சுருங்குவதால் அந்த வலி ஏற்படுகிறது. இந்த மாதவிடாய் வலி என்பது இயல்பானது.

அனேகமான பெண்களுக்கு மாதவிடாயின் போது அடிவயிற்றுப்பகுதியில் தசைப்பிடிப்பு, தொடைப் பகுதி வலி, மார்பக வலி, மார்பக வீக்கம், தலைவலி, தோள்மூட்டு வலி, மனச்சோர்வு, எரிச்சல் போன்ற சில தொந்தரவான அறிகுறிகள் தோன்றுகின்றன. இது சகஜம்தான். இந்தக் காலத்தின் முன்னும் பின்னும் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் என்னும் ஹார்மோன்களால் உடலில் மேற்சொன்ன மாற்றங்கள் ஏற்படுகிறது . இந்த வலி அதிகமாகும்போது சிலருக்கு மயக்கம் உண்டாகலாம். சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்குக்கூட ஏற்படும் வாய்ப்புண்டு. மாதவிடாய் வெளியேறுவதால் எல்லா பெண்களுக்கும் வலி இருக்கும்தான். சிலருக்கு மட்டும் வலி அதிகமாக இருக்கும். அதற்கு பல காரணங்கள் உண்டு.

எண்டோமெட்ரியோசிஸ்:
35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சமீப காலமாகவே அடிவயிறு வலியால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு அதிக காரணம் கருப்பையில் இருக்கும் குறைபாடுகள் தான். மாதவிடாய் நாட்கள் முடிந்த 15 நாட்களுக்கு பிறகு தொடங்கும் அடிவயிறு வலி படிப்படியாக அதிகரித்து உங்களை சிக்கலில் தள்ளிவிடும். ஒரு சிலருக்கு இதில் மாற்றம் இருக்கும். சிலருக்கு கொஞ்ச நாள் வலி இல்லாமல் இருந்தாலும் சிலருக்கு மீண்டும் அடுத்த 16வது நாள் வலி தொடங்கும். இப்படி மாதவிடாய் காலத்தோடு தொடர்புடைய அந்த நேரத்தில் வரக்கூடிய வலிகள் உதிரக்கட்டிகள் என்று சொல்லகூடிய எண்டோமெட்ரியோசிஸ் ஆல் வரக்கூடியதாக இருக்கும். இவை தவிர சிலருக்கு கர்ப்பப்பையில் தொற்று இருந்தாலும், பால்வினை தொற்று இருந்தாலும் கூட அடிவயிறு வலி இருக்கும்.

ஃபைப்ராய்டு கட்டிகள்:
கர்ப்பப்பையின் உள்ளோ அல்லது வெளியோ கட்டிகள் இருக்கும். சில நேரங்களில் கர்ப்பப்பை திசுக்களில் கூட கட்டிகள் இருக்கலாம். மாதவிலக்கு வருவதற்கு முந்தைய நாளில் அடிவயிறு வலிக்கும். அதோடு உதிரபோக்கும் கட்டிகளாக வெளியேறும். இது மாதவிடாயின்போது வரும் வயிறு வலி என்று அலட்சியப்படுத்தினால் கட்டிகள் வளர்ந்து பெரிதாகும். கட்டிகள் பெரிதாகும் போது அவை சிறுநீர்ப்பை, மலக்குடலை அழுத்தி மேலும் அடிவயிறுவலியை அதிகரிக்க தொடங்கும்.

அடினோமையோசிஸ்:
ஒருவருக்கு கர்ப்பப்பை வீக்கம் இருந்தாலும் அடிவயிறு வலியும் இருக்கும். கர்ப்பப்பை வால் என்று சொல்லக்கூடிய சுவர்களின் தடிமன் சற்று அதிகமாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் கர்ப்பப்பை சுருங்கும் போது அடிவயிற்றில் அதிக வலியை உண்டாக்குகிறது. அடி வயிற்றில் தாங்கமுடியாத வலியை உண்டாக்க காரணம் கர்ப்பப்பை வீக்கம் தான் என்பதை உணர்த்தும் அறிகுறியாக கூட இதை சொல்லலாம். மாதவிடாய் காலத்தில் முதல் நாளில் தொடங்கும் அடி வயிறு வலியானது இரண்டாவது மற்றும் மூன்றாவது நாளில் மேலும் மேலும் படிப்படியாக அதிகரிக்கும். பிறகு வலி இருக்காது. இப்படி மாதவிலக்கு நாளில் மட்டும் வரும் அடிவயிறு வலியை கர்ப்பப்பை வீக்கத்தின் அறிகுறியாக கொள்ளலாம்.

மாதவிடாய் வலி குறைய என்ன செய்ய வேண்டும்?

பெண்கள் வாழ்க்கை முறைகளில் சிறிய மாற்றங்களைச் செய்தால் மாதவிடாய் சமயத்தில் வலி ஏற்படாமல் தடுக்க முடியும். மாதவிடாய் வருவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே, ஒரேநிலையில் வெகு நேரம் நிற்பதோ அல்லது உட்காருவதோ கூடாது. அவ்வப்போது குனிந்து, நிமிர்ந்து சிறிய சிறிய வேலைகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது வயிற்றுப் பகுதி மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் அசைவு ஏற்படும். இது மாதவிடாய் நாள்களில் வரும் வலியைத் தடுக்கும்.

தினமும் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்ய வேண்டும். 

நீர்ச்சத்து மிக்க உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.  

மாதுளம் பழத்தை பழமாகவோ அல்லது சாறாகவோ எடுத்துக்கொள்ளலாம். இது உடலில் நீர்ச்சத்து குறையாமல் தடுக்கும்.

துவர்ப்பு உணவுகள்: மாங்கொட்டை, மாதுளம் பழத்தின் உள்பகுதி தோல், வாழைப்பூ ஆகியவற்றைச் சாப்பிடலாம். இவற்றில் இருக்கும் துவர்ப்புச் சுவை வயிறு உப்புசம் மற்றும் உடம்பில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி வலியிலிருந்து ஆறுதல் அளிக்கும்.

பிஞ்சு காய்கறிகள்: மாதவிடாய் நாள்களில் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டு அடிவயிற்றில் வலி ஏற்படும். மலச்சிக்கலைத் தவிர்க்க நார்ச்சத்துள்ள பீன்ஸ், அவரைக்காய் போன்ற காய்களை உண்ண வேண்டும். முற்றல் காய்கறிகளைத் தவிர்த்து பிஞ்சு காய்கறிகளைச் சாப்பிட வேண்டும்.

வைட்டமின் பி1, தையமின், வைட்டமின்பி6, பைரடாக்சின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உணவில் சரியான அளவில் இடம்பெற வேண்டும். பயறு வகைகள், தானிய வகைகள், நட்ஸ், அசைவ உணவுகள் (மீட்) போன்றவற்றை தேவையான அளவு சாப்பிட வேண்டும். கால்சியம், மெக்னீசியம் நிறைந்த உணவுகளையும் சாப்பிட வேண்டும். 

தாமாக மருத்துவர் பரிந்துரை இன்றி வலி மருந்துகள், சோடா போன்றவற்றை எடுக்க  கூடாது. இது வயிற்று புண்ணிற்கு வித்திடும்.

சாதாரணமான மாதவிடாய் வலியைப் பொறுத்துக் கொள்ளலாம். மாதவிடாயின்போது அதிகளவு உதிரப் போக்கு, தாங்க முடியாத வலி ஏற்படும் பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள், கருப்பைக் கட்டிகள் அல்லது கருப்பையில் புற்றுநோயின் பாதிப்போ இருக்கக்கூடும்.
தாங்க முடியாத அளவு வலி வரும் போது மருத்துவரைச் சென்று பார்க்கவேண்டியது அவசியம். ஏதாவது பிரச்னை ஏற்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து தீர்வு காண்பது அவசியம்.

Comments

Popular posts from this blog

பக்கவாதம் வருவது ஏன்? வராமல் தடுப்பது எப்படி?

குறட்டை ஆபத்தானதா??

டெங்கு காய்ச்சல் 360•