பெண்கள் தங்கள் மார்பக பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது உண்டா??


இது எளிதில் கடந்து செல்லக்கூடிய பதிவு அல்ல.

பல பெண்களின் தங்களது மார்பக பராமரிப்பில் பெரிதாக கவனம் செலுத்துவது இல்லை. அதன் காரணமாகவே பெண்கள் அதிக அளவில் மார்பகம் சார்ந்த பிரச்சனைகளால் (மார்பக கட்டிகள், மார்பக புற்றுநோய், மார்பக வலி...) அவதிபடுகின்றனர். பெண்கள் பலர் தங்களுக்கு வரும் மார்பக பிரச்சனைகள்  பற்றி வெளியில் பேச தயங்குகின்றனர். ஆனால் மார்பக பிரச்சனைகளையும் சந்தேகங்களையும் வெளிப்படையாக பேசுவது பெண்கள் நலனில் மிக அவசியமான ஒன்றாகும்.

மார்பகங்கள் பற்றி நமக்கு இருக்கும் சந்தேகங்கள்:
1.மார்பகம் என்பது பெண்ணின் ஒரு உறுப்பு. இதன் வேலை குழந்தைபேறின் போது தன் குழந்தைக்கு பால் சுரப்பது ஆகும். பருவம் அடைவது தொடங்கி குறிப்பிட்ட வயது வரை மார்பகங்கள் வளர்ச்சி அடையும். ஆண்களுக்கு பால்சுரப்பு பணி இல்லாததால் அவர்களின் மார்பகங்கள் வளர்ச்சி அடைவது இல்லை.
2. இரண்டு மார்பகங்களும் ஒரே அளவில் இருப்பது இல்லை. ஒன்றைவிட ஒன்று சற்று பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கும். இது இயல்பான ஒன்று. 
3. ஒரு சராசரி பெண்களின் மார்பகம் 5.3 முதல் 7 அவுன்ஸ் (200ml) பாலை தாங்கும் சக்தி கொண்டது. இது தாய்மை அடையும் நேரங்களில் நிச்சயம் வேறுபாடும். ஒரு பெண் தாயாகும் போது அவரின் மார்பகங்கள் 17 அவுன்ஸ் (500ml) தாய்ப்பாலை தாங்கும் அளவு ஆற்றல் கிடைக்கும். அதனால் தன் குழந்தைக்கு தடையின்றி தேவையான பாலினை தாயால்  கொடுக்க முடிகிறது.
4.சாதாரணமாக பெண்களுக்கு மார்பகங்களில் எந்தவித பாலும் வெளியே வடிவதில்லை. ஆனால் தாய்மை அடையும் பருவத்தில் அவர்களின் மார்பகங்களில் இருந்து பால் வடிவது இயல்பானது. இதை தவிர்த்து சாதாரண நேரங்களில் பால் வடிந்தால் தைராய்டு போன்ற பிரச்சினைகளும், பலவித ஹார்மோன் குறைபாடுகளும் இருப்பதற்கான அறிகுறியாகும். எனவே, இவ்வாறு அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.
5.மார்பக காம்புகளை சுற்றி முடி இருப்பது இயல்பான ஒன்றுதான். உங்களுக்கு அந்த முடிகள் இடையூராக இருந்தால் அவற்றை கத்தரிக்கோலை கொண்டு சிறிது வெட்டி விடலாம். ஆனால் அந்த முடிகளை ஷேவ் அல்லது பிடுங்கி விட கூடாது. அவ்வாறு செய்தால் பல நோய் தொற்றுகள் ஏற்பட கூடும்.
6. தாய்ப்பால் குழந்தைக்கு கொடுப்பதால் பெண்களின் மார்பகங்கள் தொங்கிவிடும் என சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் மார்பகம் தொங்கிவிடாது. முதுமை அடைய அடைய பெண்களின் மார்பகங்கள் வலிமை இழந்து தொங்கி விடும். மேலும் புகை பழக்கம் இருபவர்களுக்கும் மார்பகங்கள் விரைவில் தொங்க தொடங்கி விடும்.
7. பெண்கள் தங்கள் உள்ளாடைகளில் அதிக அளவில் கவனம் செலுத்துவது இல்லை. குறைந்தது நான்கில் ஒருவர் மட்டுமே சரியான அளவில் அணிகிறார்கள். ஒரு திடுக்கிடும் உண்மை என்னவென்றால், 85% பெண்கள் தங்கள் உள்ளாடைகளை சரியான அளவுடையதாக அணிவதில்லை. இது பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆரம்ப புள்ளியாக கருதப்படும். சரியான அளவுடைய உள்ளாடைகளை அணியாததால் மோசமான மார்பக வலி, அழகற்ற மார்பகங்களின் தோற்றம், முதுகு வலி மற்றும் நரம்பு சம்பந்தமான பல பிரச்சினைகள் வரக்கூடும்.
மேலும் பெண்களுக்கு ஒவ்வொரு பருவத்திலும் அவர்களது மார்பகத்தின் அளவு மாறக்கூடும். எனவே அதற்கு தகுந்தாற்போல உள்ளாடைகளை அணிவது மார்பகங்களுக்கு ஆரோக்கியத்தை தரும். வயதான பெண்களும் உள்ளாடைகள் கட்டாயம் அணிய வேண்டும்.

மார்பகங்களில் ஏற்படும் பிரச்சனைகள்: 1.மார்பகங்களில் வலி வரும்; கட்டி இருக்காது. இது பெரும்பாலும் வளர்ச்சியையொட்டி வரக்கூடிய வலியாக இருக்கலாம். மருத்துவரிடம் தக்க ஆலோசனையும் சிகிச்சையும் பெறலாம். 
2.சில நேரம் மார்பகங்கள் முழுக்கத் தடித்து இருக்கலாம். இதுவும் பெரிய பிரச்சினை இல்லை. அசௌகரியமாக உணர்ந்தால் மருத்துவரின் உதவியை நாடலாம். 
3.சின்ன கட்டி வரலாம். புற்றுநோய்க் கட்டியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இளம்பெண்களுக்கு மார்பகங்களில் கட்டி வருவது அபூர்வமானதென்று சொல்ல முடியாது. இப்படிப்பட்ட கட்டிக்கு ‘Fibroadenoma’ என்று பெயர். இது சுரப்பியிலிருந்தும் நரம்புத் திசுக்களில் இருந்தும் உருவாகிறது.
இத்தகைய கட்டிகள் சில நேரம் தானாகவே கரைந்துவிடும். தொடர்ந்து  இருந்தால், மருத்துவர் சிறு ஊசி மூலம், கட்டி இருக்கும் இடத்தில் இருந்து மாதிரி செல்களை எடுத்துப் பரிசோதிப்பார்கள். பிறகு கட்டி முழுவதையுமே எடுத்து பயாப்சிக்கு அனுப்பி புற்றுநோய் இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்வார்கள். 
4.மார்பகப் புற்றுநோயாக இருக்கலாம். அதன் அறிகுறிகள் வலியற்ற அல்லது  வலிமிக்க தடித்த கட்டிகள், பால்காம்புகளில் சுருங்குவது மற்றும் ஆரஞ்சு தோல்போல் மார்பகம் மாறுவது, பால்காம்புகளில் திரவம் வெளியேறுவது, இறுதியாக மார்பகத்தில் ஆறாத புண்கள் ஏற்படுவது.

மார்பகங்களை எப்படி சுய பரிசோதனை செய்துகொள்வது?
கண்ணாடி முன் நின்று நம் கையின் விரல் பகுதியைப் பயன்படுத்தாமல், உள்ளங்கையைப் பயன்படுத்தி வட்ட வடிவ சுழற்சியாகத் தடவிப் பார்க்க வேண்டும். இப்படிச் செய்யும்போது எந்த சந்தேகம் தோன்றினாலும் கண்டிப்பாக உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். விரல்களால் பார்க்கும்போது சாதாரண மார்பகத் திசுக்கள்கூட கட்டி மாதிரி தோன்றலாம். ஆரம்ப கட்டத்திலேயே பிரச்சினையைக் கண்டுபிடித்து விட்டால் நல்லது. எனவே, மார்பக சுய பரிசோதனை என்பது சுலபமான, மிகுந்த பலனைத் தரக்கூடிய தீர்வு. மாதம் ஒருமுறை மாதவிடாய் முடிந்தபின் கட்டாயம் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒருமுறை mamogram என்னும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
உடல் பருமனுக்கும் மார்பக பிரச்சினைகளுக்கும் அதிக தொடர்புண்டு எனவே உடல் எடையை எப்போதும் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.

வந்தபின் மேற்கொள்வதைவிட வருமுன் காப்பதே சிறந்தது. எனவே பெண்கள் தங்கள் மார்பக பராமரிப்பில் கவனமாக இருங்கள். சுயபரிசோதனை செய்யுங்கள். மார்பகப் பிரச்சினைகளை தவிருங்கள்.

Comments

Popular posts from this blog

குறட்டை ஆபத்தானதா??

பக்கவாதம் வருவது ஏன்? வராமல் தடுப்பது எப்படி?

டெங்கு காய்ச்சல் 360•