கண்களை பராமரிப்போம்!
இந்த உலகின் அழகினை இரசிக்க நமக்கான ஓர் அழகிய உறுப்பு நம் இரு விழிகள். அதனை பத்திரமாக பராமரிப்பது நம் கடமை.
தற்போது நடைபெற்று வரும் கோவிட் - 19 தொற்று நோயால், நாம் அனைவரும் டிவி, செல்போன், மடிக்கணினி போன்ற டிஜிட்டல் திரைக்கு முன்னால் அதிக நேரம் செலவிடுகிறோம். இது நம் கண்களில் வலியை ஏற்படுத்தும் மற்றும் நம் கண் பார்வையில் சிரமத்தை ஏற்படுத்தும். பொதுவாகவே, நாம் அனைவரும் டிவி, மடிக்கணினி அல்லது தொலைபேசி போன்ற டிஜிட்டல் திரையை பார்க்கும் போது அதிகமாக கண் சிமிட்ட மாட்டோம்.
இது நம் கண்களை வறண்டு போக செய்யும் மற்றும் இதனால் கண்களில் எரிச்சல் ஏற்படும். மேலும் தூங்கும் முன் தொலைபேசியை உற்று பார்ப்பது நம் தூக்கத்தை கெடுக்கும். இதனால் கண்கள் சிவந்து போகலாம், மற்றும் கண்களில் வீக்கம் மற்றும் கண் எரிச்சல் ஆகியவை ஏற்படலாம்.
நாம் தவிர்க்க வேண்டிய சில விசயங்கள்:
கண்களை கசக்குவது:
நாம் அனைவரும் கண்களில் நமைச்சல் இருக்கும் போது நம் கண்களை கசக்கி கொள்வோம். அடுத்த முறை இவ்வாறு செய்வதை தயவு கூர்ந்து நிறுத்துங்கள். ஏனெனில், நம் கண்களுக்கு தேவையற்ற அழுத்தம் கொடுப்பது உண்மையில் நம் பிரச்சனையை இன்னும் மோசமாக்கும். அதற்கு பதிலாக, கண் நமைச்சலில் இருந்து விடுபட குளிர் ஒத்தடம் போன்றவற்றை பயன்படுத்தலாம். நம் கண்ணுக்குள் ஏதேனும் தூசி விழுந்துவிட்டால், கண்களை மெதுவாக தண்ணீர் கொண்டு கழுவவும்.
புகைப் பிடித்தல்:
புகைப் பிடிப்பது நம் கண்களுக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமின்றி, நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் இது மோசமான ஒன்றாகும். புகை பிடித்தல் கண் நோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும். மேலும் இது, நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்த கூட வாய்ப்பு ஏற்படுத்தும்.
போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது:
உடல் நீரிழப்புடன் இருக்கும் போது, கண்களை ஈரப்பதமாக வைத்திருக்க, நம் கண்களால் போதுமான அளவு கண்ணீரை உருவாக்க முடியாது. மேலும் இது வறண்ட கண்கள், சிவந்த கண்கள், மற்றும் கண் எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். கண்களையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்க தினமும் சுமார் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
அழகு சாதன பொருட்களை (மேக்அப்) தவறாக பயன்படுத்துதல்:
கண்களுக்கு அருகில் அழகு சாதன பொருட்கள் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கண் இமை கோட்டிற்கு மிக அருகில் ஐலைனர் அல்லது மஸ்காரா போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். இது எண்ணெய் சுரப்பிகளைத் தடுக்கும் மற்றும் பாக்டீரியாக்களை உருவாக்க வழிவகுக்கும். தொற்று நோய்களை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தான பாக்டீரியாக்களை உருவாக்குவதைத் தடுப்பதற்கு , ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் உங்கள் கண் இமைகளில் உபயோகிக்கக் கூடிய மஸ்காரா மற்றும் பிற அழகு சாதன பொருட்களை மாற்ற வேண்டும் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் தூங்க செல்வதற்கு முன்பு ஒப்பனையை (மேக்அப்) அவசியம் அகற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கண் பரிசோதனையைத் தவிர்ப்பது:
கண் பிரச்சினையை முன்கூட்டியே கண்டறிவது நமக்கு ஏற்படவிருக்கும் பார்வை சிக்கல்களைத் தடுக்க உதவும். நம் கண்களை தவறாமல் அவ்வப்போது சோதித்துப் பார்க்க வேண்டும். கண் வலியை அனுபவித்து வந்தால் அல்லது பார்வை குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக ஒரு கண் மருத்துவரை (ஆப்டோமெட்ரிஸ்ட்) சந்திக்கவும்.
கண்களை பராமரிக்க என்ன செய்ய வேண்டும்:
ஆரோக்கிய உணவு உண்ண வேண்டும். உணவில் கூடுதல் பச்சைக் காய்கறிகள், மஞ்சள் மற்றும் சிவப்பு பழங்கள், கீரைகள் உண்ண வேண்டும்.
புகைக்காதீர். கண்புரை, கண்நரம்புச் சிதைவு, விழித்திரைப்புள்ளி சிதைவு ஆகியவற்றிற்குப் புகைத்தல் ஓர் ஆபத்துக் காரணி.
சூரிய கதிர்களின் புற ஊதாக் கதிரில் இருந்து காக்க குளிர் கண்ணாடி அணிய வேண்டும்..
பாதுகப்புக் கண்ணாடிகள் ஆபத்தான வேலைகளில் ஈடுபடும்போது அணிய வேண்டும்.
கணினித் திரையில் வேலை பார்க்கும்போது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்ணுக்கு ஓய்வு தர வேண்டும். 20 வினாடிகள் 20 அடிகள் தொலைவுக்குப் பார்க்கவும்.
கண்களைத் தேய்க்கும் அல்லது தொடும் முன் கைகளைக் கழுவவும்.
கண் தொற்றுக்கு நேரடியாக கடையில் மருந்து வாங்குவதைத் தவிர்க்கவும்.
தொடர் உடல் பயிற்சி உடலுக்கு மட்டுமல்லாமல் கண்ணுக்கும் நலம் பயக்கும்.
இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் கண் பரிசோதனை வருடம் ஒருமுறை கட்டாயம் செய்ய வேண்டும்.
Very useful
ReplyDelete